உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தான உணவு அவசியம். எனவே நமது உணவு பழக்க வழக்கம் பற்றி நமது யோகா ஆசிரியர் அளித்துள்ள சில ஆலோசனைகளை இங்கேக் காணலாம். எண்ணெய் உணவுகள் பற்றி நமது யோகா ஆசிரியர் அளிக்கும் விவரம் :பொதுவாக எல்லோரும் எண்ணெய் உணவுகளை சாப்பிடக் கூடாது. எண்ணெய் உடலுக்குப் பகை என்று கூறுகிறார்கள். ஆனால் எண்ணெய் என்பது உடலுக்குத் தேவையான ஒரு பொருள்தான். அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.உணவு செரிமானத்திற்கு அதிகம் உதவுவது எண்ணெய்தான். கடலை எண்ணெயைப் பயன்படுத்து வறுவல், பொரியல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம். நல்லெண்ணெயை தாளிப்பதற்கு, தோசை சுடுவதற்கு போன்றவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நல்லெண்ணையை அப்படியே உள்ளுக்கு சாப்பிடலாம். மேலும் மிளகாய் பொடி செய்து அதில் நல்லெண்ணை உற்றி சாப்பிடலாம்.இவை எல்லாமே காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள், இவை உடலுக்கு எந்தக் கெடுதலும் செய்யாது. காய்கறிகளைப் போல இவற்றை மனிதர்கள் உடல் ஏற்றுக் கொள்ளும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைத்தான் பெரும்பாலும் விரும்பி வாங்குகிறார்கள். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்பது வடிகட்டி வடிகட்டி அதில் எந்த சத்துக்களும் இல்லாமல் இருக்கிறது. அதனை சாப்பிடுவதால் பயன் ஒன்றும் இல்லை. அதனால்தான் ஜீரண சக்தி குறைகிறது.
நமது நாட்டில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்தி வந்தனர். அதுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. இப்போதுதான் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் வந்து பிரச்சினையை உருவாக்கியுள்ளன.அந்த காலத்திலேயே சித்தர்கள் ஒவ்வொரு எண்ணெயின் பயன்பாட்டை விளக்கியுள்ளனர். அவர்கள் எந்த நூலிலும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பற்றி குறிப்பிடவில்லை.
விளக்கெண்ணையின் பலன்கள் அதிகம். சில குழந்தைகளுக்கு எளிதாக மலம் வராது. எனவே அவர்களுக்கு சிறிது விளக்கெண்ணை கொடுத்தால் வயிறு சுத்தமாகும். அந்த காலத்தில் சுத்தமான விளக்கெண்ணையை கண்களில் விடுவார்கள். இது கண் பார்வைக்கு நல்லது. தூக்கம் வராதவர்கள் விளக்கெண்ணையை நெற்றியிலும் உள்ளங்காலிலும், உச்சந்தலையிலும் வைத்து விட்டு தூங்கச் சென்றால் அவ்வளவு எளிதாக தூக்கம் வரும்.
இப்போது கிடைக்கும் எண்ணெய்கள் சுத்தமானவையா?
எண்ணெயில் சுத்தம் என்பது ஏதுமில்லை. எண்ணெயை பொதுவாக காய்கறிகளில் இருந்துதான் எடுக்கிறார்கள். அதில் என்ன இருக்கிறது சுத்தம் பற்றி பேச. பொதுவாக சமைக்கும் எண்ணெயை இப்படி காய்கறி எண்ணெய்களைப் பயன்படுத்த நாம் யோசிக்கவே வேண்டாம்.
நாம் ஊரின் உஷ்ணத்தைத் தாங்க வாரத்தில் இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். நல்லெண்ணெய் என்பது உடலுக்கு குளிர்ச்சி. அதிக குளிர்ச்சியான உடல் வாகு கொண்டவர்கள் நல்லெண்ணையுடன் விளக்கெண்ணை சேர்த்து தேய்த்துக் குளிக்கலாம்.
அந்த காலத்தில் நல்லெண்ணையை லேசாக சூடாக்கி அதில் மஞ்சள் துண்டு, பூண்டு, தும்பைப் பூ, அரிசி போன்றவற்றைப் போட்டு அதனைத் தேய்த்துக் குளிப்பார்கள். இதெல்லாம் உடலுக்கு பல விதங்களில் பயனளிக்கும்.
உடலுக்கு உணவளிக்கிறோம், தோலுக்கும் உணவு தேவைப்படும் அல்லவா? அதுதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அதேப்போல தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே பலருக்கும் இல்லை. அது மிகவும் தவறு. தலைக்கு தேங்காய் எண்ணெய்த் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தற்போது கடலை எண்ணெய் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது என்று கூறுகிறார்கள். எனவே நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயைப் பயன்படுத்துவதால் எந்தக் கெடுதலும் இல்லை.