பெரும்பாலும், கடின உழைப்பில் ஈடுபடுபவர்களை விட, அமர்ந்தபடியே வேலை செய்பவர்களுக்குத்தான் அதிகமான பிரச்சினைகள் வருகின்றன.
முதலில் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்களைப் பார்க்கலாம்.
நமது முதுகெலும்பானது கேள்விக்குறியைப் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும். ஆனால், கூன் போட்டு அமர்ந்தபடியே வேலை செய்வதால் நமது முதுகெலும்பு ஆங்கில எழுத்தான சி- யைப் போன்று ஆகிவிடுகிறது.முதுகெலும்பில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதால், முதுகெலும்பின் ஒரு சில தட்டுகளில் இருக்கும் திரவம் அழுத்தத்தின் காரணமாக வெளியேறுகிறது. இதனால் முதுகுவலி ஏற்படுகிறது.மேலும், கால்களை ஒரே மாதிரியான நிலையில் வைத்து பணியாற்றுவதும் தவறு. அவ்வப்போது கால்களின் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். கால்கள் ஒரே அழுத்தமான நிலையில் இருப்பதால், உடலில் வாயுவின் இயக்கம் ஓரிடத்தில் தடைபட்டு அங்கு வலி ஏற்படுகிறது. எனவே உடலை அவ்வப்போது தளர்வாக வைத்துக் கொள்வதும், கை, கால்களின் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது.எந்த ஒரு செயலுக்கும் எதிர்மறையான ஒரு செயலை நாம் செய்தால் அது நல்ல பலனை அளிக்கும். அதாவது கூன் போட்டு அமர்ந்தபடியே இருக்கும் நாம், அவ்வப்போது, பேக் ஸ்ட்ரிச் எனப்படும் பின்பக்கமாக வளைவதை செய்யலாம்.அதுபோலவே குவிந்தபடி நம் கைகளை வைத்திருப்பதை மாற்றி, விரல்களை பின்பக்கமாக வளைக்கும் எளிய பயிற்சிகளை செய்யலாம்.அவ்வப்போது எழுந்து நடந்து சென்றுவிட்டு வரலாம். தண்ணீர் குடிக்கவோ, மற்றவர்களிடம் அலுவலக சந்தேகம் கேட்கவோ 1 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நடந்து செல்வது நல்லது.
மேலும், கணினியை நாம் குனிந்தபடி பார்க்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது கூட நமது தலை நிமிர்ந்தபடி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், எளிதில் நமது கழுத்தின் நரம்புகளில் வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.ஒரே இடத்தில் நிற்கும்போது இரண்டு கால்களையும் ஊனி நிற்கக் கூடாது. ஒரு காலில் ஊனி மற்றொரு காலை தளர்வாக விட்டு நின்றால், உடலில் இருக்கும் வாயுவானது சரியான இயக்கத்தில் இருக்கும். எனவே இடுப்புப் பகுதியில் வாயுப் பிடிப்பு என்பது ஏற்படாது.வந்துள்ள, வரவிருக்கும் அனைத்து வியாதிகளுக்கும் யோகத்தில் பயிற்சி உள்ளது. சரியான முறையில் பின்பற்றினால் நல்ல பலன் கிட்டும்.