அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டுமா?
, வெள்ளி, 13 நவம்பர் 2009 (17:35 IST)
யோகா பயிற்சியை பயில்பவர்கள் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று சில பயிற்றுனர்கள் அறிவுறுத்துகின்றனர். இது குறித்து எமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம் கூறுகையில், பொதுவாக அசைவ உணவுகள் பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆனால், அசைவ உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் எனது கருத்து.நமது பற்களே அதற்கு உதாரணம். வெறும் காய்கறிகளை மட்டும் சாப்பிடும் விதத்தில் நமது பற்கள் அமையவில்லை. மாமிசம் சாப்பிடுவதற்கும் வசதியாகத்தான் நமது பற்கள் அமைந்துள்ளன.மேலும், மருத்துவர்களும், அசைவ உணவுகளில் உடலுக்குத் தேவையான நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன என்றுதான் கூறுகிறார்கள்.மேலும், வாரத்தில் ஒரு நாள் வயிற்றிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது போல, வாரத்தில் ஒரு நாள் கடினமான உணவைக் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.அதற்காகத்தான் வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவுகளை உண்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம். உடலுக்கு ஒத்துக் கொள்ளும் என்றால் அசைவ உணவுகளை உண்ணலாம். ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அசைவ உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் அளவோடு சாப்பிடலாம். எதையுமே முற்றிலுமாகத் தவிர்க்கும்போதுதான் அதன் மீது அதிக நாட்டம் ஏற்படும். ஒருவருக்கு அசைவ உணவுகள் பிடிக்காமலோ அல்லது ஒத்துக் கொள்ளாமலோ விடலாமேத் தவிர, ஒரு கட்டாயத்தின்பேரில் விடுவது சரியாக வராது.