இந்திய உளவுத்துறையே என்னையும், சரத் பொன்சேகாவையும் எதிரிகளாக்கியது என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
தமக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலின்போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே இராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று கூறியுள்ள ராஜபக்ச, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடாத்தி விட்டது. அதன் பின்பு அதிபர்தோ்தலில் போட்டியிடுவதற்காக பொன்சேகா கூட்டுப் படைகளின் தலைமை பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய முன்வந்தபோது, அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதனை விடப் பெரும் தவறாகும்.
பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச எவ்வளவோ வற்புறுத்தியும், இந்தியாவின் அழுத்தத்தினால் அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.
அவ்வாறு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாமலிருந்தால், காலப்போக்கில் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் இராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசாங்கத்தைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக மட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.
அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
இராணுவத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி தனது பிறந்த நாளுடன் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார்.
அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பாக கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.
முரட்டுத்தனமானதும், தன்னிச்சையானதுமான போக்குகளைக் கொண்டிருந்த போதும், பொன்சேகாவின் ஆற்றல் மற்றும் அறிவுக்கு அருகில் நெருங்க முடியாத நிலையிலேயே ஏனைய அதிகாரிகள் இருக்கின்றனர்.
வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்று கடந்த கால சம்பவங்கள் தொடர்பாக ராஜபக்ச கவலையுடன் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொன்சேகா விடயத்தில் ராஜபக்ச இந்தளவுக்கு இறங்கி வருவதற்கு அரசியல்வாதிகள் சிலர், பொன்சேகா விடயத்தில் மேற்கொண்ட தலையீடுகள்தான் காரணம் என்று ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.