உலகிலேயே மிகவும் சின்னஞ்சிறிய குழந்தையாக அறியப்படும் க்வெக் யூ ஸுவான், 13 மாத சிகிச்சை முடிந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறாள்.
பிறக்கும்போது 24 செ.மீ நீளமும் 212 கிராம் எடையும் கொண்ட இந்த பிஞ்சுக்குழந்தை, சராசரியாக 40 வாரங்கள் கருவில் வளர்ந்திருக்க வேண்டிய நிலையில், 25 வாரங்களிலேயே பிறந்திருந்தாள்.
அப்போது அந்தப் பிஞ்சுக் குழந்தையின் எடை, ஒரு ஆப்பிள் பழத்தை விட குறைவானதாக இருந்தது.
ஐயோவா பல்கலைக்கழகத்தரவுகளின்படி இதற்கு முன்பு உலகிலேயே மிகவும் சின்னஞ்சிறிய குழந்தையாக 245 கிராம் எடை கொண்ட அமெரிக்க பெண் குழந்தை அறியப்பட்டார். அந்த குழந்தை 2018ஆம் ஆண்டில் பிறந்தது.
இந்த நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் கடந்த 13 மாதங்களாக சிறுமி க்வெக் யூ ஸுவானுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், உலகின் சிறிய குழந்தையை தனி குழுவை நியமித்து கவனித்தனர்.
அரிய வகை நோய்: ஒரு வயது குழந்தைக்கு கிடைத்த ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி
பிரசவத்துக்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்த நிலையில், குழந்தை க்வெக்கின் தாயாருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அது வயிற்றில் வளரும் சிசுவுக்கும் தாய்க்கும் ஆபத்தாக மாறலாம் என்று அச்சம் தெரிவித்த மருத்துவர்கள், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பிரவச காலத்துக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே சி-செக்ஷன் முறையில் குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர்.
குழந்தை பிறந்தபோது அவள் உயிர் பிழைப்பதற்கு குறைந்த வாய்ப்புகளே இருந்தன என்று 13 மாதங்களுக்கு முந்தைய நிலைமையை நினைவுகூர்ந்தனர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்கள்.
எனினும், பிறக்கும்போது பிரச்னைகளுடன் பிறந்திருந்தாலும், பிறந்த பிறகு இந்த பிஞ்சுக்குழந்தை வளர்ச்சியில் காட்டிய வேகமும் அவளது உடல்நிலை தேறிய விதமும் சுற்றியிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. அந்த வகையில் சிக்கலான சூழ்நிலையிலும் அசாதாரணமான குழந்தையாக வளர்ந்து எங்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்திருக்கிறாள் குழந்தை க்வெக் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தை க்வெக் யூ ஸுவான், பிறந்தவுடன் மற்ற குழந்தைகளைப் போல தாயின் அரவணைப்புடன் வளராமல், சுற்றிலும் செவிலியர்கள் கண்காணிப்புடனும், மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையிலும் வளர்ந்தார். பல வகை கருவிகள் உடல் உறுப்புகளுடன் இணைக்கப்பட்டு ஒவ்வொரு நாளையும் சவாலானதாகவே இந்த குழந்தை எதிர்கொண்டு வளர்ந்திருக்கிறாள்.
நாளடைவில் குழந்தையின் உடல்நலம் தேறி எடையும் கூடியதால், இனி தாயுடன் குழந்தை அவர்களின் வீட்டிலேயே வாழ அனுமதிக்கலாம் என்ற முடிவுக்கு மருத்துவமனை நிர்வாகம் வந்தது. அதன்படியே மருத்துவமனையில் இருந்து குழந்தை க்வெக் வீடு திரும்பும் நிகழ்வை கொண்டாடி அந்த குடுமபத்துக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறது சிங்கப்பூர் மருத்துவமனை.
வீட்டுக்கு திரும்பியிருந்தாலும், குழந்தை க்வெக் யூ ஸுவானுக்கு நுரையீரல் தொடர்புடைய பிரச்னை தொடர்ந்து உள்ளது. எனினும், சுத்தமான காற்றை சுவாசித்தபடி வளரும்போது அந்த பிரச்னையையும் குழந்தை ஸுவான் எதிர்கொண்டு மீண்டு வருவாள் என்று மருத்துவர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர்.
குழந்தையின் தாய் வொங் மீ லிங், "க்வெக் யூ ஸுவாங் பிறந்தபோது அவளது எடை மற்றும் அளவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆனால், இப்போது எங்களை எல்லாம் இவள் ஆச்சரியப்படுத்தி விட்டாள்," என்று பெருமிதப்பட்டார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கி சிகிச்சை பெற்ற இந்த குழந்தையின் மருத்துவ செலவுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவானது. இதற்காக கிரெளட் ஃபண்டிங் மூலம் பொதுமக்களும் ஆர்வலர்களும் வழங்கிய நன்கொடை மூலம் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் 3.66 லட்சம் டாலர்கள் கிடைத்தது. அதை வைத்து மருத்துவ செலவினத்தை குழந்தையின் பெற்றோர் எதிர்கொண்டிருக்கிறார்கள்.