உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டால் அலை அபாயம் எழுந்துள்ள சூழலில் அடுத்த ஆண்டில் உணவு பஞ்சம் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக உலக உணவு கழகம் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதலாக பல நாடுகள் முழுவதும் ஊரடங்கு விதித்த நிலையில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டின் அமைதிகான நோபல் பரிசு பெற்ற உலக உணவுக் கழகம் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு உணவு பஞ்சம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் கொரோனா காரணமாக பல நாடுகள் முழுமுடக்கத்தில் இருந்ததால் உணவு பொருட்கள் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அடுத்த ஆண்டிலும் பல நாடுகள் பொருளாதார ரீதியான சரிவுகள் மற்றும் உணவு பஞ்சத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது என அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த உலக உணவுக் கழகமானது கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்கள் பலருக்கு உணவளிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.