அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னை முத்தம் கொடுக்க அழைத்தார் என கர்ட்னி ஃப்ரீல் என்ற பெண் நிரூபரின் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதே, அவர் மீது பல பாலியல் புகார்கள் எழுந்தன. அதனை அவர் மறுத்தும் வந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் கே.டி.எல்.ஏ வானொலியில் பணியாற்றி வருகிற பெண் நிரூபர் கர்ட்னி ஃப்ரீல், ’டூநைட் அட் 10; கிக்கிங் பூஸ் அண்டு பிரேக்கிங்” என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் அவருடைய அனுபவங்கள் பலவற்றை பதிவு செய்துள்ளார். அதில், ”அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வருவதற்கு முன்பு ஒரு அழகி போட்டி நடத்தினார். அதில் நடுவராக இருக்க விரும்பினேன். இது குறித்து டிரம்ப் தரப்பில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது இன்னொரு டி.வி.நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு, அழகிப்போட்டியில் நடுவராக இருக்க முடியாது என்று டிரம்ப் மறுத்தார். அதன் பின்பு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் என் அலுவலகத்திற்கு வா, முத்தமிடலாம் என்று அழைத்தார். அதை கேட்டு அதிர்ந்து போய், தொலைப்பேசியை துண்டித்து விட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதில் குறிப்பிட்டுள்ள சம்பவம், கட்னி ஃப்ரீல் ”ஃபாக்ஸ் நியூஸ்” டிவி சேன்னலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது நடந்தது என குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெறுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இச்சமயத்தில் டிரம்ப்பின் மீது பாலியல் புகார் புதிதாக எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.