தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தொண்டர் ஒருவரை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, என் விரலை ஒடிக்க பார்த்ததால் தள்ளினேன் என்று மகிந்த ராஜபக்சே விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது முன்னாள் அதிபர் ராஜபக்சே, தனது கையைப் பிடித்து இழுத்த தொண்டரை தாக்க முயன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து ராஜபக்சே தற்போது செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அப்போது, ''ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் அக்குரச்ச தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
தேர்தல் பிரச்சார மேடையை நோக்கி நான் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த தொண்டர் ஒருவர் எனது கை விரலை பிடித்து இழுத்தார். எனக்கு வலித்தது, கொஞ்சம் விட்டிருந்தால் அவர் எனது விரலை துண்டாக ஒடித்து இருப்பார். அதனால்தான், ஆத்திரப்பட்டு அவரை நான் தள்ளினேன்" என்று கூறியுள்ளார்.