உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியுள்ள நிலையில் 7 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசப்படவில்லை என்றும், உக்ரைன் ராணுவ முகாம்கள், தளவாடங்கள் உள்ள பகுதிகளில் மட்டுமே குண்டு வீசப்பட்டதாகவும் ரஷ்யா கூறி வந்தது. தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுகள் வீசப்படுவதும், உயிரிழப்பு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா காலை முதலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை 7 உக்ரைன் பொதுமக்கள் ரஷ்யாவின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மக்கள் பலர் வீடுகளை விட்டு ரயில் சுரங்க பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.