தேர்தல் நெருங்கி வருவதால் திமுக சார்ப்பில் மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் இதுபோன்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது பின்வருமாறு, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். அப்போது உங்கள் குறைகள் அனைத்தும் நிச்சயம் நிவர்த்தி செய்யப்படும்.
சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை குறைகளுக்கு காரணமே உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததுதான். உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைந்துவிடுவோமோ என அஞ்சி கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை.
உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் தலைவர் ஸ்டாலினிடம் கொண்டு சேர்க்கப்படும். அத்தனை கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பிறகு நான் இங்கு மீண்டும் வருவேன் என பேசினார்.
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.