சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை காரணம் காட்டி, அமெரிக்க அரசு சில நாடுகளுக்கு வரியை உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வை அமெரிக்கா தவறாக அமல்படுத்தியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது தவறை திருத்திக்கொள்ளாவிட்டால், வழக்கு தொடர்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்க டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். அதேபோல், சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலடியாக, கனடாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளது. மெக்சிகோவும் விரைவில் வரியை உயர்த்தும் என எச்சரிக்கை செய்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இது சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பிற்கு இடையூறாக அமையும் எனவும் கூறியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது தவறை திருத்திக்கொள்ளாவிட்டால், உலக வர்த்தக கூட்டமைப்பில் இதற்கு எதிராக வழக்கு தொடரும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்போது, ட்ரம்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.