அமெரிக்க தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. மெக்ஸிகோவில் சுவர் எழுப்பியது, அகதிகள், கறுப்பினத்தவர் விவகாரங்களில் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் குறித்தவை ஜோ பிடன் தரப்பிற்கு பெரும் பிரச்சார உத்திகளாக மாறியுள்ளன. மேலும் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இந்திய பூர்வீகத்தை சேர்ந்தவர் என்பதாலும், அகதிகள், கறுப்பின மக்கள் இடையே செல்வாக்கு உள்ளவர் என்பதும் குடியரசு கட்சிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் இந்தியா, சூடான், லெபனான் உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் நிகழ்வை நடத்தியுள்ளார். இந்தியா சார்பாக மென்பொறியியல் வல்லுனர் சுதா சுந்தரி நாராயணன் என்ற பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றை வழங்கினார் ட்ரம்ப். முன்னதாக எச்1பி விசா விவகாரம் உள்ளிட்டவற்றால் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டினர் ட்ரம்ப் மீது அதிருப்தியில் இருந்த நிலையில் ட்ரம்ப் இந்த நிகழ்வை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.