அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியா குறித்து பேசி வருவது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கை கவர்வதற்காக இந்தியா குறித்து புகழ்ந்து பேசிய ட்ரம்ப் தற்போது தாக்கி பேசி வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது.
முன்னதாக கொரோனா இறப்பு எண்ணிக்கையில் இந்தியா போலியான கணக்கை காட்டுவதாக ட்ரம்ப் பேசியிருந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் சுற்றுசூழல் ட்ரம்ப் அரசாங்கத்தில் சீர்குலைந்துள்ளதாகவும், உலக அளவிலான சுற்றுசூழல் மாசுபாட்டில் அமெரிக்காவின் பங்கு அதிகம் என்றும் ஜோ பிடன் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ட்ரம்ப் உலகிலேயே அதிகமான சுற்றுசூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவது இந்தியாதான் என பேசியுள்ளார். ட்ரம்ப் தொடர்ந்து இந்தியா குறித்து பேசி வரும் பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.