லெபனானின் ஹிஜ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது காசாவை மையமாக கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தியதுடன் பலரை பணையக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர்ந்த போரில் இதுவரை 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸை ஒழிக்கும் வரையில் போர் ஓயாது என இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானை சேர்ந்த ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலின் மவுண்ட் மெரான் பகுதியில் 35 ராக்கெட்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே காசா மீது போர் தொடுத்து வரும் இஸ்ரேல், ஹிஜ்புல்லா மீது அதிரடி தாக்குதலில் இறங்கியுள்ளது.
ஹிஜ்புல்லா அமைப்பினர் அதிகம் பதுங்கியிருப்பதாக கருதப்படும் எல்லைப்பகுதிகளான ஹன்னியே, ஜிப்சித், பைசரியே மற்றும் மன்சவுரி ஆகிய பகுதிகளில் ஹிஜ்புல்லா அமைப்பின் ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் போரே முடிவுக்கு வராத நிலையில் ஹிஜ்புல்லா அமைப்புடன் மற்றுமொரு எல்லையில் மற்றுமொரு மோதல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.