ரஷ்யாவில் தண்ணீர் கூட அருந்தாமல் கடுமையாக வீகன் டயட் முறையை பின்பற்றி வந்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல டயட் முறைகள் பிரபலமாக உள்ளன. அவற்றில் சமீப காலமாக மிகவும் பிரபலமாகவும், சர்ச்சைக்குரியதாகவும் உள்ள டயட் முறை வீகன் டயட் முறை. வீகன் டயட் முறை மேற்கொள்பவர்கள் இறைச்சி மட்டுமல்லாமல் மிருகங்கள் வழி வரும் பால், தயிர், வெண்ணெய், முட்டை போன்ற எந்த பொருட்களையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.
அவ்வாறாக ரஷ்யாவை சேர்ந்த 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவாவும் தீவிரமாக வீகன் டயட் முறையை பின்பற்றி வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார்.
நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் தற்போது ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீவிர வீகனான ஸன்னா தாகம் எடுத்தால் கூட தண்ணீர் குடிக்காமல் கடந்த பல ஆண்டுகளாக பழச்சாறுகள் மட்டுமே குடித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. வீகன் பெண்மணியின் இந்த பரிதாப மரணம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.