தாய்லாந்தில் சாலையை கடக்க முயன்ற யானைக்குட்டி பைக்கில் மோதி மூச்சடைத்து விழுந்த நிலையில் இளைஞர் ஒருவர் அதை சி.பி.ஆர் சிகிச்சை செய்து காப்பாற்றிய சம்பவம் வைரலாகியுள்ளது.
ஆசியாவில் அதிகமான யானைகள் வாழும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. இதனால் அடிக்கடி யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளில் சென்று விடும் சம்பவங்களும் நடக்கின்றன. தாய்லாந்து நாட்டின் சாந்தபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் யானைக்குட்டி ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் கட்டுக்கடங்காமல் சென்று யானைக்குட்டி மீது மோதியதில் பைக்கில் இருந்து இருவரும் சாலையில் தூக்கி விசப்பட்டனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்றுள்ளனர் அங்கிருந்தவர்கள். ஆனால், பைக் மோதியதால் காயம்பட்ட யானைக்குட்டி மூச்சடைத்து சாலையிலேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மன ஸ்ரீவெட் என்ற விலங்குகள் ஆர்வலர் மூச்சடைத்த யானையின் இதயத்தை செயல்பட செய்வதற்காக அதன் நெஞ்சின் மீது கைகளை வைத்து பலமாக அழுத்தினார். இதனால் யானைக்குட்டிக்கு மூச்சு திரும்பிய நிலையில் அதை மின்வேன் ஒன்றின் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.