நேற்று தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்த நிலையில் இன்று ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சாய்ந்த நிலையில் மக்கள் பலரும் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். ஜப்பான் வானிலை நிலவியல் ஆய்வு அமைப்பு இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டராக பதிவானதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 9 பேர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஒகினாவா மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் சுனாமி ஏற்படாது என்றும் அலைகள் 3 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்கு இன்று ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஹொன்ஷூ கிழக்கு கடலோர பகுதியில் பதிவாகியுள்ளது. அதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படலாம் என கூறப்படுவதால் பரபரப்பு நிலவி வருகிறது.