Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலேசியத் தமிழறிஞர் சீனி நைனா முகமது மறைவு

Advertiesment
மலேசியத் தமிழறிஞர் சீனி நைனா முகமது மறைவு

அண்ணாகண்ணன்

, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2014 (12:03 IST)
மலேசியத் தமிழறிஞரும் கவிஞருமான சீனி நைனா முகமது, மறைந்தார். தொல்காப்பியத்தில் சிறந்த புலமை வாய்ந்த இவர், மலேசியாவில் பினாங்கில் பல்லாண்டுகளாக இலக்கண வகுப்புகள் நடத்தி வந்தார். உங்கள் குரல் என்ற மாத இதழின் ஆசிரியருமாகத் திகழ்ந்து, மலேசிய மண்ணில் விழிப்பணர்வு ஏற்படுத்தி வந்தார். மலேசிய மண்ணில் தமிழ் உணர்வு தழைத்தோங்க, பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
 
சீனி நைனா முகமது (Seeni Naina Mohamed), 2014 ஆகஸ்டு 6ஆம் தேதி காலை, மலேசியாவின் புகிட் ஜம்புல் அருகே உள்ள அவரது இல்லத்தில் நெஞ்சு வலியின் காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 67. இவருக்கு ரஹிமா என்ற மனைவியும் ஷமிமா என்ற மகளும் உள்ளனர். தமிழ்நாட்டின் கடையநல்லுரில் 1947ஆம் ஆண்டு பிறந்த சீனி நைனா, 1959ஆம் ஆண்டு தம் 12ஆவது வயதில் மலேசியாவுக்குப் புலம் பெயர்ந்தார். 
 
சிறந்த பண்பாளரும் பொதுநலத் தொண்டருமான சீனி நைனா அவர்களின் மறைவுக்கு வெப்துனியா, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
 
கவிஞர் சீனி நைனா முகமது இயற்றிய தமிழ் வாழ்த்து இங்கே
 
காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின் தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில் தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே!
 
எங்களெழில் மலைசியத்தில் சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய் இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின் புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில் புரட்சிவலம் வருபவளே!
 
செவ்வியலின் இலக்கியங்கள் செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில் செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்  ஆளுகின்ற புதியவளே!
 
குலங்கடந்து நெறிகடந்து நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம் கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும் நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே நிலைபெறநீ வாழியவே!

Share this Story:

Follow Webdunia tamil