Publish Date: Sun, 12 Apr 2026 (10:19 IST)
Updated Date: Sun, 12 Apr 2026 (10:20 IST)
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேல் நடந்தது. இதில் ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் பல சேதங்கள் ஏற்பட்டது. அதோடு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கடல் வழியான ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடியது. அமெரிக்கா பலமுறை எச்சரித்தும் ஈரான் ஹோர்மூஸ் நீரிணையை திறக்கவில்லை.
ஒருவழியாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கடந்த 7ம் தேதி இரண்டு வார காலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால் சற்று பதற்றம் தணிந்தது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தையை நடக்க பாகிஸ்தான் பாகிஸ்தான் ஏற்பாடுகள் செய்தது.
இதையடுத்து ஏப்ரல் 11ஆம் தேதியான நேற்று பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் தலைமையிலான குழு மற்றும் ஈரானின் முக்கிய தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். சுமார் 21 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இஸ்லாமாபாத்திலிருந்து அமெரிக்கா கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணைதிபர் ஜே.டி.வான்ஸ் அணுசக்தி திட்டங்களை நிறுத்துவது தொடர்பான எங்களது கோரிக்கைகளை ஈரான் ஏற்கவில்லை. எனவே, ஈரானுடன் எங்களுக்கு ஒப்பந்தம் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என அவர் கூறினார்.
ஈரானுடன் நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் மீண்டும் கடுமையான தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். எனவே, அமெரிக்கா - ஈரான் -இஸ்ரேல் போர் மீண்டும் தொடங்குமா என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
Mahendran
Publish Date: Sun, 12 Apr 2026 (10:19 IST)
Updated Date: Sun, 12 Apr 2026 (10:20 IST)