இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களின் கடைகள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார்.
ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முஸ்லீம் பயங்கரவாத இயக்கங்கள்தான் காரணம் என்று உளவுதுறை அளித்த தகவலின் பேரில் பயங்கரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது அமைதியான நிலை திரும்பி கொண்டிருக்கும் வேளையில், சில பகுதிகள் இன்னும் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவே இருந்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொலம்போவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள குருநேகலா என்ற பகுதியில் மசூதிகள் மீதும், முஸ்லீம்களின் கடைகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் காயம்பட்ட ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியை இலங்கை இராணுவம் பதட்டம் நிறைந்த பகுதியாக அறிவித்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதமான செய்திகள் எதுவும் பரவாமல் தடுக்க பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களையும் முடக்கியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்தனே ”அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷயங்களில் நாம் சிக்கி கொள்ளக்கூடாது. வன்முறை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிதான்” என ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.