Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகளாவிய நலன்களுக்கு சீன-அமெரிக்க நல்லிணக்கம் அவசியம்

உலகளாவிய நலன்களுக்கு சீன-அமெரிக்க நல்லிணக்கம் அவசியம்
, செவ்வாய், 30 மார்ச் 2021 (23:10 IST)
1972 ஆம் ஆண்டில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தூதரக உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இரு நாடுகளும் தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் உறவுகளை மேம்படுத்தி வந்துள்ளன. இருநாடுகளுக்கு  இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும்,  இருநாடுகளுமே  வர்த்தக கூட்டாளிகளாக இருந்து வந்தன. 2016 இல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆகும் வரை இருதரப்பு உறவில் நன்மை விளைந்தன.
 
டிரம்ப் காலத்தில், அமெரிக்க நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக சீனாவுடனான உறவைத் துண்டிக்கத் தொடங்கியது. வர்த்தகப் போரின் பெயரில், டிரம்ப் ஆட்சி சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயன்றது. இந்தோ-பசிபிக் வியூகத்தின் மூலம் பட்டுப்பாதை முன்முயற்சியை (பிஆர்ஐ) தடுக்கவும் அமெரிக்கா முயன்றது.
 
அமெரிக்காவின் பல பிரமுகர்கள் சீனாவுக்கு எதிரான கருத்துக்களை அதிகமாக வெளியிட்டு வந்ததோடு, கரோனா தொற்றுநோய்ப் பரவலுக்கு சீனாதான் காரணம் என்று குற்றம் சாட்டினர். ஹாங்காங், சின்ஜியாங், தைவான் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களை கொண்டு சீனாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றனனர். இதையடுத்து சீன-அமெரிக்க உறவில் 1972 க்குப் பின்னர் பிளவு ஏற்படத்தொடங்கியது.
 
இந்நிலையில் ஜோ பிடன் அதிபராக பதவியேற்றுக்கொண்டு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார். அதனடிப்படையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் நீண்ட தொலைபேசி பேச்சுவார்த்தைகளை நடத்தி, உறவுகளை சீரான பாதையில் கொண்டு செல்வதற்கான ஒருமித்த கருத்தை எட்டினார். இதையடுத்து இரு தரப்பினரும் உயர் மட்ட வியூகம் வகுத்திருப்பதாக அறிவித்தனர்,. இது உலகில் பல நாடுகளுக்கு நிம்மதி அளித்தது.
 
சீனா-அமெரிக்காவின் உயர் மட்ட வியூக உரையாடல் அலாஸ்காவில் உள்ள ஏங்கரேஜில் நடைபெற்றது, இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரான யாங் ஜீச்சி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் இந்த உரையாடலில் கலந்து கொண்டனர்.
 
அப்போது பிப்ரவரியில் இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசி உரையாடல்களில் எட்டிய ஒருமித்த கருத்தை செயல்படுத்துவது பற்றி பேசினர். அமைதி, செழிப்பு, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது, மற்றும் சர்வதேச உறவுகள் பல உலகளாவிய நலன்களுக்கு முக்கியமானது என்பதால்  இந்த கலந்துரையாடல் பற்றி உலகம் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை சீனர்களும் அமெரிக்கர்களும் விரும்புகிறார்கள். ஆனால் கலந்துரையாடலின் மூலம் எட்டப்பட்ட முடிவுகள் பற்றி உறுதியான கருத்துக்களை இருதரப்பும் வெளியிடவில்லை. 
 
இந்த உரையாடல்கள் வெற்றுச் சொற்களைத் தவிர வேறொன்றையும் உருவாக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர், மேலும் சிலர் இந்த கலந்துரையாடலில்  எதைப் பற்றியும் அதிகம் பேசவில்லை என்று கூறுகிறார்கள். 
 
உலகின் இரு முக்கிய பொருளாதார நாடுகளுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கு ஏற்றவகையில் இந்த கலந்துரையாடல் இருந்ததது என சீனா குறிப்பிட்டுள்ளது. இரு தரப்பினரும் தங்கள் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து நேர்மையான மற்றும் ஆக்கபூர்வமான பரிமாற்றங்களை மேற்கொண்டனர் என்று அது கூறியுள்ளது. உரையாடல் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு உதவியாகவும் உகந்ததாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது. .
தொற்றுநோய் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு சீனாவைத் தவிர வேறு எந்த ஒரு பெரிய பொருளாதார நாடும் அதன் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க முடியவில்லை. ஒவ்வொரு நாடும் பேரிழப்பை சந்தித்தன, இதன் விளைவாக உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சீன-அமெரிக்க ஒத்துழைப்பு பொருளாதாரத்தின் இழப்புகள் மற்றும் திருப்புமுனைகளை மீட்டெடுக்க உதவும். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சில வெளிப்படையான வேறுபாடுகள் இருப்பதை அனைவரும் அறிவோம். ஆனால்  வைரஸின் பிடியிலிருந்து மனிதகுலத்தை காப்பாற்றுவதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் சீன-அமெரிக்க நல்லிணக்கம் அவசியம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
 
- திருமலை சோமு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரவுடிகளை கட்சியில் சேர்ந்துள்ளது பாஜக – ஸ்டாலின்