”தேவையில்லாமல் என் குடும்பத்தையும், சொந்த விஷயங்களையும் யாரும் பேச வேண்டாம்” என முன்னாள் கிரிக்கெட் வீரரும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் கணவருமான ஸோயப் மாலிக் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சானியா மிர்ஸாவுக்கும், பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக்குக்கும் ட்விட்டரில் ஏற்பட்ட சண்டையின் தொடர்ச்சியாக இதை அவர் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஸோயப் மாலிக். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சானியா மிர்ஸா “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியை வெறும் விளையாட்டாக மட்டும் பாருங்கள். அதை பெரிதுபடுத்த வேண்டாம்” என சொல்லியிருந்தார்.
அதற்கு சானியா மிர்ஸாவை கிண்டல் செய்யும் தோனியில் பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக ட்விட்டரில் பதிவிடவும், இருவருக்குமான ட்விட்டர் சண்டை வலுத்தது. அப்போது சானியா “நான் ஒன்றும் பாகிஸ்தான் அணியின் ஆரோக்கிய நிபுணரோ, ஆசிரியரோ அல்ல” என்று கோவமாய் பதிவிட்டிருந்தார். இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயப் மாலிக் மற்றும் சானியா மீது வெறுப்பை உண்டாக்கியது.
சமீபத்தில் ஒரு கேளிக்கை விடுதியில் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் ஆடி பாடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, இந்தியா-பாகிஸ்தான் போட்டியன்று இருவரும் குடித்துவிட்டு கூத்தடித்து கொண்டிருந்ததாக இணையத்தில் யாரோ பதிவிட்டு விட்டார்கள்.
அதை தொடர்ந்து ஸோயப் மாலிக்கையும், சானியா மிர்ஸாவையும் பல்வேறு விதங்களில் விமர்சித்து இணையத்தில் பலர் திட்ட ஆரம்பித்தனர். மேற்கொண்டு தம்பதியினர் இருவரையும் தவறாக சித்தரித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொறுமையிழந்த ஸோயப் மாலிக் ட்விட்டரில் “நம்பகதன்மையில்லாத செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள் நீதிமன்றத்தை சந்திக்க தயாரா?
நான் கடந்த 20 வருடத்திற்கும் மேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்காக உழைத்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு என் சொந்த வாழ்க்கையை தொடர்புபடுத்தி பேசுவது வருத்தமளிக்கிறது. அந்த நிகழ்ச்சி நடந்தது ஜூன் 13 அன்றுதான். ஜூன் 15 அல்ல” என தெரிவித்துள்ளார்.