போராளிகள் வசமுள்ள ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிக்கி, பேருந்தொன்றில் சென்றுகொண்டிருந்த 29 பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பேருந்து, அப்போது சாடா பிராந்தியத்திலுள்ள தயான் சந்தை வழியாக பயணித்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக ஹூதிகள் நடத்தும் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கும் குறைவானவர்கள் என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
ஏமன் அரசாங்க ஆதரவுடன், அந்நாட்டிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சௌதி தலைமையிலான கூட்டணி இந்த தாக்குதல் 'சட்டப்படியானதுதான்' என்று தெரிவித்துள்ளது.
தாங்கள் எப்போதுமே பொது மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதில்லை என்று கூறும் அந்த அமைப்பு, தாங்கள் சந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக மனித உரிமைகள் அமைப்புகள்தான் குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது.
சாடாவில் என்ன நடந்தது?
உள்ளூர் பொதுமக்கள், அதிகளவிலான பள்ளி குழந்தைகளுடன் சாடா பிராந்தியத்திலுள்ள தயான் என்ற சந்தையை கடந்து பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது, வான் தாக்குதல் நடந்ததாக அப்பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் அஸோஸியேட்டட் பிரஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமையன்று நடந்த இந்த தாக்குதலுக்கு பிறகு, சாடா பிராந்தியத்தில் தாங்கள் உதவிகள் வழங்கும் ஒரு மருத்துவமனைக்கு உயிரிழந்த/ காயமடைந்த பலரது உடல்கள் வந்ததாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு (ஐசிஆர்சி) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 47 பேர் உயிரிழந்ததாகவும், 77 பேர் காயமடைந்ததாகவும் செய்தி வெளியிட்ட ஹூதிகளால் நடத்தப்படும் தொலைக்காட்சியான அல்-மாசிரா, மேலும், இதில் சிக்கி உயிரிழந்த சீருடையில் இருக்கும் பள்ளி குழந்தைகளின் புகைப்படங்களையும் ஒளிபரப்பியது.