துருக்கி, சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை தனி விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட கடுமையான தொடர் நில நடுக்கங்களால் கட்டிடங்கள் பல தரைமட்டமாகின. ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் பலர் இடிபாடுகளில் சிக்கி பல உடல் குறைபாடுகளை அடைந்துள்ளனர். உலக நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவ மீட்பு படைகளையும், மீட்பு பொருட்களையும் அனுப்பி உதவின. தற்போது மீட்பு பணிகள் முழுவதும் முடிந்து விட்ட போதிலும் அப்பகுதி மக்களுக்கு புது வீடுகள் கட்டுதல், அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் ஆகிய செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியா நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரரான ரொனால்டோவுக்கு அந்நாட்டில் அதிகமான சொத்தும் உள்ளது. அதனால் துருக்கி, சிரியா மக்களுக்கு தேவையான உணவு, பால், மருந்து பொருட்கள், தலையணைகள், போர்வைகள் என பல பொருட்களை தனிவிமானம் ஒன்றின் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.