இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த நிலையில் அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். அதை தொடர்ந்து அவரது உடல் ஸ்காட்லாந்து கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தியபின் மீண்டும் இங்கிலாந்து கொண்டு வந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
நேற்று ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. காலை 11 மணி வரை பொதுமக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு பிற்பகல் 3.14 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து லண்டனின் முக்கிய வீதிகள் வழியாக ராணியின் சவப்பெட்டி எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்து விண்ட்சார் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அவரது குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்ட பிரார்த்தனை நடைபெற்றது.
ஆதன்பின்னர் ராணியின் உடல் அவரது கணவர் பிலிப்பின் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணியின் சவப்பெட்டி ஊர்வலத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளின் முப்படைகளை சேர்ந்த 6 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர். ராணியின் சவப்பெட்டி ஊர்வலத்தை காண லண்டன் முழுவதும் 10 லட்சம் பேர் குவிந்திருந்தனர்.
மேலும் ராணியின் இறுதி சடங்குகள் மற்றும் ஊர்வலம் லண்டனில் உள்ள திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் திரையிடப்பட்டன.