மாலத்தீவில் 12 எம்பி-களின் தகுதி நீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, அதோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனால் அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் உருவானது. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து, 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். மேலும், அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவின் முதல் அதிபர் முஹம்மது நஷீத், தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு 13 ஆண்டு சிறை காவலில் அடைக்கப்பட்டார்.
தற்போது அவர் பிரிட்டன் அரசால் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டு இலங்கையில் தங்கியுள்ளார். மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, அதிபர் முஹம்மது நஷீத் டிவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
# மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை விடுவிக்க ராணுவ துணையுடன் ஒரு தூதுவரை இந்தியா அனுப்ப வேண்டும்.
# அப்துல்லா யாமீனை நாம் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக உலக நாடுகளை - குறிப்பாக, இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியை மாலத்தீவு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவு அரசு ஆதரவு செய்தித்தாள் ஒன்று சமீபத்தில் சீனாவை தங்கள் நண்பன் என்றும் இந்தியாவை எதிரி என்றும் வெளிப்படையாகவே குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. எனவே இது இந்தியா சீனா மோதலின் ஒரு அங்கம் என வர்ணிக்கப்படுகிறது.