Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் கொல்லப்பட்டார் - இரான்

Advertiesment
அணு விஞ்ஞானி
, செவ்வாய், 1 டிசம்பர் 2020 (15:37 IST)
இரானின் முன்னணி அணு சக்தி விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைச் சுட்டுக் கொலை செய்ய, இஸ்ரேல் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறிய அரசுக்கு  எதிரான குழுவினர், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தியதாக நம்புகிறது இரான்.

மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொலை செய்யப்பட்டதில், இஸ்ரேலின் பங்கு இருக்கிறது என இரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
 
2000-களில், இரானின் அணுசக்தி திட்டங்களில், மொஹ்சென் ஃபக்ரிஸாதே முக்கியப் பங்கு வகித்தார்.
 
இரான் அணு ஆயுதங்களை மேம்படுத்திவிடக் கூடாது என்கிற நோக்கில், பல மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், தன்னுடைய  அணுசக்தி நடவடிக்கைகள் எல்லாமே ஆக்கப்பூர்வமானவை என இரான் வலியுறுத்திக் கூறியது.
 
மொஹ்சென் ஃபக்ரிஸாதே எப்படி இறந்தார்?
 
மொஹ்சென் ஃபக்ரிஸாதே கடந்த வெள்ளிக்கிழமை டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் அப்சார்ட் எனுமிடத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
 
மொஹ்சென் ஃபக்ரிஸாதேவுக்கு என்ன நடந்தது என இரான் கூறும் விளக்கம், பெரிய அளவில் மாறி இருக்கிறது. அவர் பயணித்த காரின் மீது சரமாரியாக தோட்டாக்கள் துளைத்தபோது மொஹ்சென் ஃபக்ரிஸாதே உயிராபத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு காயமுற்றார் எனத் தோன்றுகிறது.
 
தாக்குதலின் போது, ஒரு நிஸான் பிக்-அப் டிரக்கில், ஒரு வெடிகுண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
 
முதலில், மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் பாதுகாவலர்களுக்கும், சில ஆயுதம் தாங்கியவர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக, இரானின் பாதுகாப்பு  அமைச்சகம் குறிப்பிட்டது.
 
தீவிரவாதிகள் என்று கூறப்பட்ட மூன்று முதல் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், அதை ஒருவர் பார்த்ததாகவும் இரானிய அரசின் ஓர் அறிக்கை கூறியது.
 
தற்போது, மொஹ்சென் ஃபக்ரிஸாதே ரிமோட் வழியாக இயக்கப்படும் இயந்திரத் துப்பாக்கியால் கொல்லப்பட்டார் அல்லது செயற்கைக் கோள் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆயுதத்தால் கொல்லப்பட்டார் என இரானின் ஊடகங்கள் கூறுகின்றன.
 
மொஹ்சென் ஃபக்ரிஸாதே மீது நடத்தப்பட்ட தாக்குதல், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் ஆயுதத்தால், சிறப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது என, இரானின் ரியர் அட்மிரல் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான ஷம்கானி நேற்று (30 நவம்பர் 2020) கூறி இருக்கிறார்.
 
"மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த கொலைத் திட்டம் மிகவும் சிக்கலானது. சம்பவ இடத்தில் யாருமே இல்லை. மொஹ்சென்  ஃபக்ரிஸாதேவைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்பது இரானின் உளவுத் துறை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குத் தெரியும். அவ்வளவு ஏன், எந்த இடத்தில்  தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூட கணித்து இருந்தோம். இந்த தாக்குதலுக்கு இரான் அரசுக்கு எதிரான முஜாஹிதீன்-இ-கல்க் மற்றும் இஸ்ரேல் நாடுதான்  காரணம்," என மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் இறுதிச் சடங்கின்போது குறிப்பிட்டு இருக்கிறார் ஷம்கானி.
 
மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் கொலைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என, இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை அமைச்சர் எலி  கோஹென், நேற்று வானொலி நிலையம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
 
"அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற இரானின் ஆசையை வளர்த்து எடுத்தார் மொஹ்சென் ஃபக்ரிஸாதே. இது உலகத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. உலகம் இஸ்ரேலுக்கு நன்றி கூற வேண்டும்" என நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, பெயர் குறிப்பிடாமல் ஓர் இஸ்ரேலிய உயர் அதிகாரி  கூறியதயைக் குறிப்பிட்டு இருந்தது.
 
இயந்திரத் துப்பாகிகள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் துப்பாகிகள் எல்லாம், மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது  ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஒரு செய்தி.
 
இரான் எப்படி பதிலளிக்கிறது?
 
மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் இறுதிச் சடங்குகள் டெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்றது, அதன் பின்னர் அவரது உடல் தலைநகருக்கு  வடக்கே உள்ள கல்லறைத் தோட்டத்துக்கு மாற்றப்பட்டது.
 
மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் உடலை, இரானின் ராணுவத்தினர், உளவுத் துறை அமைச்சர் மஹ்மூத் அலாவி, புரட்சிகர பாதுகாப்புப் படையின் கமாண்டர் ஜெனரல் ஹொஸ்ஸெயின் சலாமி, அணு சக்தித் துறையின் தலைவர் அலி அக்பர் சலேஹி உள்பட பல மூத்த அதிகாரிகளும் சுமந்து வந்தார்கள். பின்னர் இறுதி  அஞ்சலி செலுத்தினார்கள்.
 
மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைக் கொன்றவர்களை பழி தீர்ப்பதில் தீர்மானமாக இருக்கிறோம் என இரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் அமிர் ஹடாமி,  ஃபக்ரிஸாதேவின் அஞ்சலிக் கூட்டத்தில் கூறினார்.
 
எந்த ஒரு குற்றத்துக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கும், முட்டாள் தனமான செயல்பாடுகளுக்கும் இரான் மக்கள் விடை கொடுக்காமல் இருக்கமாட்டார்கள். இது  எதிரிகளுக்கும் தெரியும். நான் ஒரு ராணுவ வீரனாக இதைக் கூறுகிறேன் என்றார் ஹடாமி.
 
இரானின் பாதுகாப்புத் துறையின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக இருந்த ஃபக்ரிஸாதே, அணு சக்தி பாதுகாப்பில், பிரமாதமான பணிகளைச் செய்து இருக்கிறார். மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் பாதையை இன்னும் வேகமாகவும், இன்னும் பலமாகவும் தொடர, இந்த அமைப்புக்கு, இரான் அரசு  கொடுக்கும் பணத்தை இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார் ஜெனரல் ஹடாமி.
 
மிகப் பெரிய உளவுத் துறை தோல்வி
ஃபிராங்க் கார்ட்னர் பாதுகாப்பு செய்தியாளர்
 
மொஹ்சென் ஃபக்ரிஸாதே எப்படி கொல்லப்பட்டார் என, இரான் தரப்பில் சொல்லப்படும் விவரங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகவே இருக்கின்றன.
 
முதலில், 12-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்தியவர்கள், மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் வாகனத்தை தாக்கியதாகவும், விஞ்ஞானியின் பாதுகாவலர்களோடு சண்டை  போட்டதாகவும் கூறுகிறார்கள்.
 
தற்போது ரிமோட் வழியாக இயக்கும் வாகனம் மற்றும் ரிமோட் மூலம் இயக்கும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள். இது வேடிக்கையாகவும், நம்பகைத் தன்மை குறைவாகவும் இருக்கிறது. ஆனால் இது முடியாத காரியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஒரு கொலை கும்பல் தங்கள் வேலையை முடித்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, தங்களின் இலக்கை தொடர்ந்து கவனிப்பார்கள். ஒருவேளை, இரான் தரப்பு முதலில் கூறியது உண்மையாக இருந்தால், இரானின் சக்திவாய்ந்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகள் தலைநகரிலிருந்து எட்டிப் பார்க்கும்  தொலைவில் இருக்கும், கொலை கும்பலை வேட்டையாட வேண்டிய சங்கடமான சவாலை எதிர்கொள்ளும்.
 
ஒரு விஷயம் தெளிவாகிறது, இது இரானின் பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு, மிகப் பெரிய உளவுத் துறை தோல்வி. இப்போது சில கடினமான கேள்விகள்  கேட்கப்படுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெருங்கி வரும் புரெவி புயல்; பயிர்காப்பீடு அவசியம்! – வேளாண் துறை அறிவுறுத்தல்!