தென் கொரியாவுடனான அனைத்து தகவல் தொடர்பையும் வடகொரியா துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகள் நடத்தி வருவது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து ஆயுத பரிசோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவுக்கு பாடம் புகட்டுவதற்காக தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது வடகொரியாவை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
வடகொரியா – தென்கொரியா இடையே பல காலமாக மோதல் இருந்து வந்தாலும் இருநாட்டு அரசு தரப்பு தகவல் தொடர்புக்காக மட்டும் கடந்த 2018ம் ஆண்டு இருநாட்டு எல்லைப் பகுதியில் தகவல் தொடர்பு அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சமீப காலமாக அமெரிக்காவுடன் தென்கொரியா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் தென்கொரியா விடுக்கும் அழைப்புகளை வடகொரியா எடுப்பதே இல்லையாம். கடந்த 4 நாட்களாக தங்களது எந்த அழைப்பையும் வடகொரியா எடுக்கவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியா அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டு, தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக வடகொரியா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் இருநாடுகளுக்கிடையேயான விரிசல் அதிகரித்து வருகிறது.