Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென் கொரியா, வடகொரியா இடையே மீண்டும் ஹாட்லைன் வசதி

தென் கொரியா, வடகொரியா இடையே மீண்டும் ஹாட்லைன் வசதி
, செவ்வாய், 27 ஜூலை 2021 (12:31 IST)
தென் கொரியா மற்றும் வட கொரியா இடையிலான ஹாட்லைன் தொலைப்பேசி வசதி மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரியா துண்டித்தது.
 
இரு நாட்டுத் தலைவர்களும் உறவை மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இரு தலைவர்களும் பல கடிதங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும் தென் கொரிய அதிபர் அலுவலகமான ப்ளூ ஹவுஸ் கூறியுள்ளது.
 
இரு நாடுகளுக்கிடையில் தோல்வியுற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், உறவுகளில் விரிசல் ஏற்பட்டதால் 2020 ஜூன் மாதம் ஹாட்லைன் தொலைப்பேசி வசதியை வட கொரியா துண்டித்தது. தென் கொரியா மற்றும் வடகொரியாவும் தொடர்புகொள்வதற்காக, இரு நாட்டு எல்லை அருகே கட்டப்பட்ட ஒரு அலுவலகத்தையும் அப்போது வட கொரியா தகர்த்தியது.
 
``உயர்மட்ட தலைவர்களுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஜூலை 27 அன்று 10:00 மணி முதல் இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான தொலைத் தொடர்பு இணைப்புகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது`` என வடகொரியாவின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
இரு நாட்டுப் பிரதிநிதிகளும் மூன்று நிமிடங்கள் தொலைப்பேசியில் பேசியதாக தென் கொரியாவின் ஒற்றுமை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மற்றொரு அழைப்பு மேற்கொள்ளப்படும் என்றும், இனி தினமும் ஹாட்லைன் மூலம் பேசப்படும் என்றும் ஒற்றுமை அமைச்சகம் கூறியுள்ளது.
 
2018-ம் ஆண்டு தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னும், வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னும் மூன்று முறை சந்தித்துப் பேசினார். இதனால் இருநாட்டு உறவுகளும் மேம்பட்டது. ஆனால், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் உடனான இரண்டாவது உச்சி மாநாடு தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து வட மற்றும் தென் கொரியா இடையிலான உறவுகள் உடைந்தது.
 
வட கொரியாவிலிருந்து தப்பித்து தென்கொரியாவில் வாழும் மக்கள், எல்லையில் வட கொரியா நோக்கி பிரசார காகிதங்கள் மற்றும் பலூன்களை அனுப்பியதால் இரு நாடுகள் இடையிலான பதற்றங்கள் மோசமடைந்தது. இதனால் கோவமடைந்த வட கொரியா, தென் கொரியா உடனான ஹாட்லைன், ராணுவம் மற்றும் அரசியல் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைபர் தாக்குதல்: ஹேக்கிங் தரவுகளை மீட்க முடியுமா?