Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் புதிய முகம்

அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் புதிய முகம்
, வெள்ளி, 23 ஜூலை 2021 (00:40 IST)
இந்த உலகத்தில் பருவநிலை மாற்றம் இயற்கை பேரிடர் என்பதை எல்லாம் தாண்டி, அடுத்த 10 ஆண்டுகளில் மனித இனம் சந்திக்கப்போகும் பெரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானவையாக இருக்கப்போவது, வருமானம் மற்றும் பாலின ஏற்றதாழ்வுகள். ஆண் பெண் விகிதாச்சாரத்தில் சமமின்மை நிலவும். சமூகத்தில் ஒருதரப்பினரிடம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும். மற்றொரு தரப்பினர் அன்றாட வாழ்க்கைக்கு அல்லாடும் நிலையில் இருப்பர். திருமணம் போன்ற சமூக கட்டமைப்புகளில் இளம் தலைமுறையினரிடம் பிடிப்பு இல்லாமல் போகும்.
 
செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற சக்திவாய்ந்த நான்காவது தொழில்துறை புரட்சி ஏற்பட்டு பணக்கார வர்க்கம் அதிவேக உலகில் பயணிக்கும். இவற்றோடு ஒட்ட முடியாமலும், இவற்றில் இருந்து விலகி இருக்க முடியாமலும் நடுத்தர வர்க்க சமூகம் திணறிக்கொண்டிருக்கும். 
 
2028-ம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்துக்கு முன்னேறிவிடும். தற்போது இந்தியாவில் சென்செக்ஸ் 51,000 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நான்கு மடங்கு அளவுக்கு சென்செக்ஸ் உயரும். 2030-ம் ஆண்டு இந்தியா உலகின் 3-வது பெரிய நாடாக உயரும். 
 
பெட்ரோ டீசல் விலை 4 மடங்கு அதிகரித்திருக்கும். சாலைகளில் மின்னணு வாகனங்களில் பயன்பாடு அதிகரித்திருக்கும். வாகன துறையின் விற்பனை முதல், 20 லட்சம் கோடி ரூபா¬யாக உயரும். இந்¬திய வாகன துறை சர்¬வ¬தேச அளவில் முதல் இடத்தை பிடிக்கக் கூடும். 
 
அடுத்த பத்து ஆண்டுகளில் கல்வி அனுபவமிக்கதாக மாறும், பள்ளியில் படிக்கும் போதே மாணவர்கள் வேலைவாய்ப்பு திறன்களைப் பெற முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.  தொழில்நுட்பங்கள் மூலமே மாணவர்களில் கற்றல் இருக்கும். ஆசிரியர்கள் ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருப்பார்கள். உலக அளவில் 5.9 மில்லியன் புதிய செவிலியர்கள் தேவைப்படுவார்கள். குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அதிகமாக செவிலியர்கள் தேவை இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளில், தரவு அளவுகள் பெருமளவில் வளர்ந்துள்ளன. தங்கள் வாடிக்கையாளர்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், முடிவெடுப்பதை மேம்படுத்துவதற்கும் இந்தத் தரவு அளவுகளை பயன்படுத்திய வணிக நிறுவனங்கள் வெற்றி கண்டுள்ளன. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த டேட்டா தரவு பயன்பாடு என்பது பெருமளவில் வளர்ச்சி கண்டிருக்கும். 
 
மேலும் எந்தெந்த தொழில்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் வளர்ச்சி காணப்போகிறது என்று பார்க்கும் போது, திருமண தகவல் மையம் முன்னணி இடத்தை வகிக்கிறது. 2021 ஆம் ஆண்டில் திருமண தகவல் மையத்தின் தேவை சுமார் 41% அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2030 ஆம் ஆண்டில் இதன் தேவை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் என சொல்லப்படுகிறது. 
 
உலக மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது,  அதற்கு இணையாக விவசாயத் தொழில் வளர வேண்டும். நிச்சயமாக மக்கள் தொகை உயரும்போது, மக்கள் வாழ நிலம் தேவைப்படுகிறது  எனவே விவசாய தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் வளர்ச்சி காணும். பல நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது செங்குத்து விவசாய தொழில்நுட்பத்தில் முதலீடு அதிகரிக்கும். நகரத்திற்கு அருகிலுள்ள பண்ணைகளிலிருந்து உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு பதிலாக நகரத்திலேயே இதன் மூலம் உணவுப் பொருட்களை விளைவிக்க முடியும். இது எதிர்காலத்தில் பெரும் லாபத்தை ஈட்டக்கூடும் என தெரிகிறது.
 
அடுத்தது நீர் வர்த்தகம். 43 நாடுகளில் சுமார் 700 மில்லியன் மக்கள் இன்று தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030 க்குள் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 24 மில்லியன் முதல் 700 மில்லியன் மக்கள் சில வறண்ட மற்றும் பாதி வறண்ட இடங்களில் இருந்து நீர் பற்றாக்குறை காரணமாக இடம்பெயரக்கூடும். நீர் வர்த்தகத்தின் மூலம் பணம் ஈட்டல் என்பது அதிக முன்னுரிமை கொண்டதாக இருக்கும். பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் இப்போது செழித்துக் கொண்டிருக்கிறது, தண்ணீர் பற்றாக்குறையாக மாறும்போது என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?
 
தண்ணீருக்கு அடுத்து மின்சாரம் முழு ஆற்றல் அமைப்பின் முதுகெலும்பாக இருக்கும். தற்போது பலர் சோலார் பேனல்களில் முதலீடு செய்கிறார்கள் மின்சார கட்டணங்களில் இருந்து விடைபெறுகிறார்கள். சூரியசக்தியில் முதலீடு செய்ய விரும்பும் மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆசியா பசிபிக் பகுதியில் சூரிய சக்தி திறன் 1.5 டெராவாட் (டி.டபிள்யூ) ஆக மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. சீனாவின் சூரிய இலக்குகள் என்பது 2030 க்குள் ஆசிய பசிபிக் சூரிய ஆற்றலில் 60% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும். ஜப்பானின் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் 2030 ஆம் ஆண்டில் 36-38% ஆக இருக்கும் இது 2020 மார்ச் வரையிலான நிதியாண்டில் 18% அளவை விட இரு மடங்காக இருக்கும் என கூறுகிறது. 
 
இந்தியாவிலும் சோலார் பேனல் மின் உற்பத்திக்கும் மின்னணு வாகன்ங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது அடுத்த பத்து ஆண்டுகளில் இது பெரும் வளர்ச்சி காணும் என்பதில் யாரும் ஐயம் இல்லை. மின்னணு வாகனம், சோலார் மின் சக்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என முற்றிலுமாக வேறு ஒரு முகத்துடன் ஜொலிக்கப்போகும் இந்த உலகத்தில் மனிதன் தன் நேய முகத்தை இழந்து இயந்திர கதியாய் சுற்றித்திரிவான். 
- திருமலை சோமு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் பெருவெள்ளம்: சாலையில் குப்பையாய் குவிந்து கிடக்கும் கார்கள் - 'பருவநிலை மாற்றம் காரணம்'