நேபாள நாட்டில் உள்ள மந்திரிகள் இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மடிக்கணினிகளை இயக்க பழக வேண்டும் என்றும் அவ்வாறு பழகவில்லை என்றால் அவர்களுடைய மந்திரி பதவி நீக்கப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒளி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்நாட்டு அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நேபாள நாட்டின் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகியுள்ள ஒளி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது விரைவில் நேபாள நாட்டில் காகிதங்கள் பயன்படுத்தாத அலுவலகங்களை உருவாக்கவிருப்பதாக கூறினார். இனி மடிக்கணினிகள் மூலமே கூட்டங்கள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் என அனைத்தும் விவாதிக்கப்படும் என்றும் கூறினார்
மேலும் அமைச்சர்கள் அனைவரும் மடிக்கணினிகளை இயக்க இன்னும் ஆறு மாதத்திற்குள் பயிற்சி பெறவேண்டும் என்றும் அவர் கூறினார். அவ்வாறு ஆறு மாதங்களுக்குள் அமைச்சர்கள் மடிக்கணினியை இயக்க கற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார். இதனால் நேபாள மந்திரிகள் அனைவரும் சொந்தமாக மடிக்கணினி வாங்கி பயிற்சி பெற முடிவு செய்துள்ளனர்.