இந்த ஜனவரி மாதத்தில் அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட உலகின் பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள், சிறுகோள்கள், வால்மீன்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் பல விண்கற்கள், சிறுகோள்கள் பூமியின் சுற்றுபாதைக்கு குறுக்கே கடந்து செல்கின்றன. அந்த வகையில் இந்த ஜனவரி மாதத்தில் பூமியின் குறுக்கே சிறுகோள் ஒன்று கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார் 3,280 அடி உள்ள இந்த சிறுகோளான 1994 பிசி1 அமெரிக்க எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு பெரியது.
இது பூமிக்கும் நிலவுக்குமான தொலைவு போல 5 மடங்கு தொலைவில் பூமியை இந்திய நேரப்படி ஜனவரி 19ம் தேதி காலை 3.21 மணியளவில் கடக்கும் என கணித்துள்ளனர். மிக தூரத்தில் கடந்தாலும் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் சிறுகோள் பூமியை நெருங்கும் அபாயம் உள்ளதால் அபாயகரமான சிறுகோள் என நாசா இதை வகைப்படுத்தியுள்ளது.