சமீபமாக சீன உளவு பலூன் ஒன்று அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் கனடாவிலும் மர்ம பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு மேலே சமீபத்தில் பலூன் ஒன்று பறந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட அந்த பலூன் கடல் மட்டத்திற்கு மேலே சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் அது வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் என சீனா தொடர்ந்து வாதிட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண வான்வெளியில் மற்றுமொரு உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேபோல கனடா வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த மர்ம பொருள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து அமெரிக்கா, கனடா பகுதிகளில் இவ்வாறான பறக்கும் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.