இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 17-ம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரங்கள் மும்முரமாக நடந்துவருகின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சே, இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மீண்டும் தனது அரசியல் வாழ்க்கையை நீட்டிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
எனினும், ராஜபக்சே குடும்பத்தினர் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில் இம்முறை தேர்தலில் பெரும் சவால்களை மகிந்த ராஜபக்சே அணியினர் எதிர்நோக்கியுள்ளனர்.
ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எல்லாம் 'அரசியல் நோக்கம் கொண்டவை' என்று மகிந்த ராஜபக்சே பிபிசியிடம் கூறினார்.
மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்கு வந்தபோது ஜனாதிபதியாக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. அந்தப் போரின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.
போர் வெற்றியின் பின்னர் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பெருகியிருந்த ஆதரவு மூலம் மகிந்த ராஜபக்சே விரும்பும்வரை ஆட்சியில் இருக்கலாம் என்ற தோற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது.
எனினும், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், அவரது சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவிடமே மகிந்த ராஜபக்சே தோல்வியைத் தழுவினார்.
இம்முறைத் தேர்தலில் ஆளுந்தரப்பை விட பின்தங்கிய நிலையிலேயே மகிந்த ராஜபக்சே அணியினர் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
ஆனாலும், நாட்டில் அமைதியை ஏற்படுத்திய பெருந்தலைவர் என்றும் அவரை பிரதமராக்க வேண்டும் என்றும் அவரது அணியினர் பிரசாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போதுள்ள அரசாங்கம், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி நாட்டைத் துண்டாடும் திட்டத்தில் உள்ளதாகவும் மகிந்த அணியினர் பிரசாரம் செய்கின்றனர்.