அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கல்வி கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்து வருகிறார் நடப்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடியரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு அந்நாட்டிற்கான அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். அவ்வாறாக கடந்த 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்றார். அதற்கு முன்பு தொடர்ந்து இருமுறை டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தார்.
நடப்பு அதிபரான ஜோ பைடனின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பருடன் முடிவுக்கு வரும் நிலையில் டிசம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுவது முடிவாகிவிட்ட நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால் வேகவேகமாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார் ஜோ பைடன். 2020 தேர்தல் வாக்குறுதியில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது 74 ஆயிரம் பேரின் சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை ரத்து செய்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் மொத்தமாக 4.3 கோடி பேரின் கல்வி கடன்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் 74 ஆயிரம் பேருடையது மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இதே போல 80,300 பேரின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மேலும் பலரின் கல்வி கடன்களும் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.