இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும்போது திடீரென கால்பந்து வீரரை மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது. 2 எஃப்.எல்.ஓ பாண்டங் மற்றும் எஃப்.பிஐ சுபாங் கால்பந்து அணிகள் இடையேயான இந்த போட்டியை காண மைதானத்திலும் ஏராளமானோர் கூடியிருந்துள்ளனர்.
அப்போது சுபாங் அணியை சேர்ந்த கால்பந்து வீரர் செப்டைன் ராஹர்ஜா விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்னல் தாக்கியது. இதில் நிலை குலைந்து விழுந்த ரஹர்ஜா உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். கால்பந்து வீரர் மின்னல் தாக்கி மரணமடைந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 மாதங்களில் கால்பந்து வீரர் மின்னல் தாக்கி மரணமடைவது இது இரண்டாவது முறை என இந்தோனேஷியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.