அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் நேரடி வாதத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அதிபர் வேட்பாளராக இருந்த ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரும் நேரடி விவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக தற்போது கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் விவாதம் நடத்த கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் சம்மதித்துள்ளனர். பென்சில்வேனியாவில் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த நேரடி விவாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கமலா ஹாரிஸ் உடனான நேரடி விவாதத்தில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ளேன் என்றும் இந்த விவாதத்தில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் முன்கூட்டியே எழுதிக் கொண்டு வரும் குறிப்புகள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் நியாயமான முறையில் விவாதம் நடைபெற எங்களிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
இந்த நேரடி விவாதம் உலகம் முழுவதும் நேரலையில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.