அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க அரசின் வற்புறுத்தல் காரணமாக சுவீடன் பாலியல் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதன் காரணமாக அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். எனவே அவரை இன்று வரை அந்த வழக்கில் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அசாஞ்சே மீதான பாலியல் வழக்கின் விசாரணை கைவிடப்படும் என்று சுவீடன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களில், அசாஞ்சே ஆவேசமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.. தன் மீது அபாண்டமாக குற்றம் சுமத்திய சுவீடன் நாட்டின் துரோகத்தை மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அசாஞ்சே மீதான பாலியல் வழக்கு கைவிடப்படுவதால் லண்டனில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல அசாஞ்சே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை பாதுகாப்பாக பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்க ஈக்வடார் தூதரகம் முயற்சி செய்து வருகிறது. மேலும் தற்போதைய டிரம்ப் அரசு அசாஞ்சே மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க விரும்பவில்லை என்றே வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.