காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
இந்த தாக்குதலை யார் முன்னின்று நடத்தினார்களோ, யார் அமெரிக்கா பாதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்கள் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்.
இதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.