நிலவில் வெற்றிகரமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் தரையிறங்கியதை அடுத்து நிலவில் காலூன்றிய 5வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வெற்றிகரமாக நிலவுக்கு விண்கலங்களை அனுப்பிய நாடுகள் ஆகும்.
ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நிலவை நோக்கி ஏவப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டர் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
ஸ்லிம் விண்கலத்தில் உள்ள துல்லியமான தரையிறங்கும் அமைப்பு நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசி மற்றும் பாறைகளைப் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி தரையிறங்கும் இடத்தைத் தேர்வு செய்கிறது. தரையிறங்கும் போது ஏற்படும் வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது.
ஸ்லிம் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. இது தங்கள் நாட்டின் ஒரு முக்கியமான மைல்கல் என்றும், இந்த வெற்றி ஜப்பான் விண்வெளியில் தனது ஆதிக்கத்தை மேலும் நிலைநிறுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளது.