சமீப காலமாக தொடர் ஏவுகணை சோதனைகளால் ஜப்பானை அச்சுறுத்தி வந்த வடகொரியா தற்போது ராணுவ உளவு செயற்கைக்கோள்களை ஏவ உள்ளது ஜப்பானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியா, அடிக்கடி ஏவுகணைகளை தென்கொரியா, ஜப்பான் கடல் எல்லைப்பகுதியில் வீசி பிரச்சினை செய்து வருகிறது. வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவதை ஐ.நா சபை கண்டித்தும் அதை வடகொரியா கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் அடுத்த கட்டமாக ராணுவ உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களை கொண்டு தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளை வேவு பார்க்க வடகொரியா திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை ஜப்பானை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. வடகொரியா ஏவும் செயற்கைக்கோள்கள் ஜப்பான் எல்லைப்பகுதிக்குள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்த ஜப்பான் பாதுகாப்பு மந்திரி ஜப்பான் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.