ஈரானில் கடந்த 19 நாட்களாக தொடரும் பெருமழையால் கிட்டதட்ட 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து 17 நாட்களாக மழை பெய்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இது பதிவாகி உள்ளது. மார்ச் 19க்கு முன்னதாக ஈரானின் வடகிழக்கு பகுதியில் தொடங்கிய மழை பாதிப்பு மார்ச் 25க்கு பின்னர் மேற்கு, தென்கிழக்கு என பரவத் தொடங்கியது. ஏப்ரல் 1லிருந்து தென்கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் நாடு முழுவதும் 15 மாகாணங்களில் 2,199 கிராமச் சாலைகளும் 84 பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் 141 ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுமார் 400 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 12 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் சேதமடைந்துள்ளன
இந்த மழைக்கு இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 800 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால் உதவிகள் கிடைப்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.