Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோனேஷியாவில் ஒரு அத்திப்பட்டி – உலகம் காண மறந்த உண்மை

Advertiesment
இந்தோனேஷியாவில் ஒரு அத்திப்பட்டி – உலகம் காண மறந்த உண்மை
, வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (16:12 IST)
சிட்டிசன் என்ற தமிழ்படத்தில் அத்திப்பட்டி என்ற ஊர் உலகத்துக்கே தெரியாமல் மறைந்துபோனதாக ஒரு கதை வரும். கிட்டத்தட்ட அதுபோல உலகமெங்கும் பல நகரங்கள் கடலுக்குள் வேகமாக மூழ்கி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்தோனேஷியாவை சேர்ந்த ஜகார்தா.

1 கோடி மக்கள் வாழும் ஜகார்தா வருடம்தோறும் 24 செ.மீ தூரம் கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே மணல் மேட்டுப்பகுதியில் இருந்த தெருக்களும் வீடுகளும் கடலுக்குள் செல்ல தொடங்கி விட்டன. வேகமாக மூழ்கி வரும் நகரங்களில் ஜகார்தா முதலிடத்தில் இருக்கிறது. உலகம் முழுக்க வேகமாக மூழ்கி வரும் நகரங்களை பற்றிய பட்டியல் சமீபத்தில் வெளியானது.

அந்த பட்டியலை பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ஏனென்றால் வல்லரசு நாடுகள் தொடங்கி வறுமையில் உழலும் பல நாடுகளின் நகரங்கள் வரை அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இயற்கைக்கு வளர்ந்த நாடு வளராத நாடு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது என்பதையே இந்த பட்டியல் சுட்டிக்காட்டுகிறது. இப்படி நகரங்கள் கடலுக்குள் மூழ்க முக்கிய காரணம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதுதான் என ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் நிலப்பகுதி கீழ் இறங்குகிறது. இதனால் நகரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி கடல் நீர் உள்ளே புகுந்து விடுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு கடல் மட்டத்திலிருந்து உயரத்திலிருந்த ஜகார்தா இப்போது உயரம் குறைந்து கடலுக்குள்ளேயே சென்று கொண்டிருக்கிறது. 2050ல் இந்த நகரம் ஒட்டு மொத்தமாக கடலுக்குள் சென்றுவிடும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
webdunia

ஏற்கனவே இந்தோனேஷியாவில் இதுபோல பெடோனோ என்ற 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கடலுக்குள் மூழ்கி விட்டது. ஆனால் இந்தோனேஷிய ஆட்சியாளர்கள் இதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. ஏனென்றால் ஜகார்தாவின் 80 சதவீத மக்கள் நிலத்தடி நீரைதான் குடிப்பது முதல் சகல தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கும் சிக்கலான பணியை இந்தோனேஷியா முதலிலேயே மேற்கொண்டிருந்தால் இந்த சிக்கல் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். தற்போது சதுப்பு நில காடுகளை வளர்ப்பது, கடல் நீர் உள்ளே வராமல் தடுப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை தற்காலிக நடவடிக்கையாகவே இருக்கின்றன.

ஜகார்தா மூழ்கி கொண்டிருப்பது தெரிந்தாலும் அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறுவதாக இல்லை. கடல் நீரும், குப்பையும், சாக்கடையும் கலந்து மிதக்கும் அந்த சாலையிலும் பயணித்து கொண்டுதான் இருக்கிறார்கள். மூழ்கிய நகருக்கு நடுவே காட்சி தரும் முத்ஸாகீர் கல்லறைக்கு பயணிகள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

உலகம் வேகமாக கடலில் மூழ்கி வருவதை காட்டும் ஒரு உதாரணம்தான் ஜகார்தா, பெடோனோ ஆகிய நகரங்கள். தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சி கொண்டிருக்கும் எந்தவொரு நகரத்திற்கும் இந்த நிலை ஏற்படலாம். இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே இதற்கு காரணம் என்று காலம்காலமாக விஞ்ஞானிகள் சொல்லி வருகிறார்கள். அரசாங்கமும், மக்களும் இணைந்து செயலாற்றினால் மட்டுமே நம் நகரங்களை நாம் பாதுக்காத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் நம் நகரங்கள் கடலோடு கடலாக, வெறும் கதையாக மட்டும்தான் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெடிக்காத துப்பாக்கி குண்டு: சிரிப்பாய் சிரித்த போலீஸின் நிலை!