உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஊக்குவிப்பதால் தன்னுடைய போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியடைவதாக ட்ரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 80வது உலக நாடுகள் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகள் இடையே நடைபெறும் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்த இரு நாடுகளாக அவற்றை அங்கீகரிப்பதே முடிவாக இருக்கும் என பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “ரஷ்யா தொடர்ந்து போரை நடத்தி வருவதற்கு, அந்நாட்டிடம் இருந்து சீனா மற்றும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வணிகம் செய்வதே காரணம். அவர்கள் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி வழங்கு ஊக்குவிக்கின்றனர்” என குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “உலகம் முழுவதும் நான் பல போர்களை நிறுத்தியுள்ளேன். இதில் அதிபர் மெக்ரான் இரண்டு போர்களை நிறுத்த எனக்கு உதவினார். ஆனால் உக்ரைன் - ரஷ்யா சூழ்நிலை அதிருப்திகரமான ஒன்றாக இருந்து வருகிறது. விரைவில் இது முடிவுக்கு வரும் என நம்புகிறேன். புதினுடனான நட்பின் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என நினைத்தேன். ஆனால் அந்த உறவில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விட்டது” என வேதனை தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K