தமிழக மீனவர் பிரிட்ஜோ நேற்று முன் தினம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகாரத்துறை இணை அமைச்சர் ஷர்ஷத் சில்வா இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர் பிரச்சனை தொடர்பாக ஏப்ரல் மாதம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு எட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும் இன்று இந்திய, இலங்கை அதிகாரிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை சிறைகளில் உள்ள இருநாட்டு மீனவர்களையும் விடுவிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. அதுமட்டுமின்றி இருநாட்டு மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் இருநாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.