ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது புதிய ஆயுதத்தை கொண்டு ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் நேட்டோவில் இணைய முயன்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது போரைத் தொடங்கியது ரஷ்யா. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள், ஆயுத உதவிகளை ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா வழங்கி வருகிறது. மேலும் இந்த போரை நிறுத்த உக்ரைன், ரஷ்யா இடையே தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் பேசி வருகிறார்.
ஆனால் ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்து வருகிறது. ட்ரம்ப் - புதின் இடையே நடந்த அலாஸ்கா சந்திப்பும் போரில் எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. இதனால் ட்ரம்ப் ரஷ்யாவிற்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதன்படி, ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால், போர் நிறுத்த பேச்சுவார்த்தை, அமைதி ஒப்பந்தங்களுக்கு தயாராக இல்லாவிட்டால், அமெரிக்கா தனது சக்திவாய்ந்த டொமாஹாக் ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்கும் என எச்சரித்துள்ளார்.
டொமாஹாக் (Tomahawk) ஏவுகணை என்பது அமெரிக்காவால் 1970களில் தயாரிக்கப்பட்டு கடற்படையில் பயன்படுத்தப்படும் நீண்ட தூரம் பயணித்து தாக்கி அழிக்கும் ஏவுகணையாகும். இதன் அப்டேட்டட் வடிவம் சுமார் 1000 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கும் வலிமையுடையது.
Edit by Prasanth.K