வரி ஏய்ப்பு வழக்கில் சமரசம் செய்வதற்காக இத்தாலிக்கு ₹2953 கோடி வழங்க கூகுள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் மிகப்பெரிய தேடுதள நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி, விளம்பரங்கள் மூலம் பில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டுகிறது. இந்த வருமானத்திற்கு கூகுள் முறையாக வரி கட்டுவதில்லை என்றும் வரி ஏய்ப்பு செய்வதாகவும் பல்வேறு நாடுகள் குற்றம் சுமத்தி வழக்குகள் தொடங்கின.
அந்த வகையில், பிரான்ஸ் நாடும் கூகுள் மீது வழக்கு தொடர்ந்தது. அப்போது ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பணம் செலுத்தி, வரி விசாரணையை கூகுள் முடித்துக் கொண்டது.
இப்போது, இத்தாலியும் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த நிலையில், இத்தாலி அரசுடனும் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, வரி ஏய்ப்பு வழக்கின் விசாரணையை கைவிட, கூகுள் நிறுவனம் இந்திய மதிப்பில் ₹2953 கோடி ரூபாய் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அடுத்து, இத்தாலி அரசும் விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.