டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெளிநாட்டவர்களையும் சுற்றுலா பயணிகளையும் கவர்வதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் திரைஉலகினர், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கி வரும் நிலையில், தற்போது டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் இந்த விசாவை வழங்க அந்நாட்டு அரசு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும் என்றும், கடந்த 13ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ₹337 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோல்டன் விசா பெறுவதன் மூலம் எந்தவித ஆவணங்கள் இன்றி 10 ஆண்டுகள் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தங்க முடியும். அதற்குப் பிறகு விசாவை புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. மேலும், முழு வரிவிலக்கு, மேம்பட்ட மருத்துவ வசதிகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசா பெற, 25 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் மற்றும் முன் அனுபவங்கள் தொடர்பான சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.