தன்னுடைய மகனை திருமணம் செய்ய மறுத்த இளம் ஆசிரியரை, தலைமை ஆசிரியர் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரின் உள்ள அப்பர்தேவா என்ற கிராமத்தில் வசிப்பவர் மரியா அப்பாசி(19). அவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார்.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு, மரியாவை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் மரியாவின் சம்மதத்தை அவர் கேட்டுள்ளார்.
ஆனால், அவரின் மகனோ ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். மேலும், மரியாவை விட இரு மடங்கு வயது அதிகம் உடையவர்.
எனவே மரியா சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மரியா இசைந்து கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அந்த தலைமை ஆசிரியர், தன்னுடைய நண்பர்கள் நான்கு பேருடன் சென்று மரியாவை அடித்து உதைத்துள்ளார்.
மேலும், அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்தார். பலத்த தீ காயங்களோடு மீட்கப்பட்ட மரியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த தலைமை ஆசிரியரும், அவரது நண்பர்களும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.