எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி விடுத்த அழைப்பை ஏற்று, எகிப்தின் ஷார்ம் எல் ஷேக்கில் நடைபெறும் காஸா அமைதி உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக, வெளியுறவு துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல்-சிசி ஆகியோர் இணைந்து தலைமை தாங்குகின்றனர். இதில், ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸ், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதே மாநாட்டின் நோக்கம்.
இருப்பினும், இந்த அமைதி முயற்சிக்கு சவால்கள் உள்ளன. பாலஸ்தீன போராளிக்குழுவான ஹமாஸ், ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட ட்ரம்பின் திட்டத்தில் உடன்பாடில்லாததால், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில், 47 இஸ்ரேலியப் பிணைக் கைதிகளுக்கு ஈடாக 250 பாலஸ்தீனக் கைதிகள் மற்றும் 1,700 காஸா வாசிகளை இஸ்ரேல் விடுவிக்க ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.